மாநிலங்களவைத் தேர்தல் - பா.ம.க. புறக்கணிப்பு

வெள், 06/21/2013 - 18:22 -- Velayutham
 
தீர்மானங்கள்
 
தீர்மானம் -1 : நீதி கேட்டு போராடிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அய்யாவை கைது செய்த தமிழக அரசுக்கு கண்டனம்
 
மாமல்லபுரத்தில் கடந்த ஏப்ரல் 25&ஆம் தேதி நடைபெற்ற சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் பங்கேற்பதற்காக வந்த பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது மரக்காணம் என்ற இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வன்முறை கும்பலைச் சேர்ந்தவர்களும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தினர். விடுதலை சிறுத்தைகளால் நடத்தப்பட்ட இந்தக் கலவரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அரியலூர் செல்வராஜ், கும்பகோணம் விவேக் ஆகிய இரு அப்பாவிகள் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். வன்முறை கும்பல் நடத்திய தாக்குதலில் ஏராளமானோரும், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி வன்னியர்கள் 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
 
ஏற்கனவே கடந்த 2002&ஆம் ஆண்டில் மாமல்லபுரம் மாநாட்டிற்கு வந்த பா.ம.க. மற்றும் வன்னிய சங்கத்தினர் மீது இதே கும்பல் தாக்குதல் நடத்தி, இருவர் படுகொலை செய்திருந்தது. இந்த முறையும் அதேபோன்ற தாக்குதலை நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆலோசனை நடத்தி வருவதை அறிந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் அதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதன்மீது காவல்துறையினர்  நடவடிக்கை எடுத்திருந்தால், மரக்காணம் கலவரத்தை தடுத்திருக்க முடியும். ஆனால், காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் வன்முறைக்கு துணை போனார்கள். இருவர் உயிரிழப்பு, பலர் படுகாயம் என பாட்டாளி மக்கள் கட்சியினர் கடுமையாக பாதிக்கப் பட்ட நிலையில் அவர்களுக்கு நீதி வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசும், காவல்துறையும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த 1500&க்கும் மேற்பட்ட அப்பாவிகள் மீது பொய்வழக்கு பதிவு செய்தன.
 
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், பா.ம.க.வினர் இருவர் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டும் விழுப்புரத்தில் ஏப்ரல் 30&ஆம் தேதி தமது தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என்று ராமதாஸ் அய்யா  அறிவித்தார்கள். இப்போராட்டத்திற்கு தொடக்கத்தில் அனுமதி அளித்த காவல்துறை , போராட்டத்திற்கு சில மணி நேரம் முன்பாக அனுமதியை இரத்து செய்தனர். இதையே காரணம் காட்டி போராட்டம் நடத்தச் சென்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸையும், தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்ட நிர்வாகிகளையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
 
நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி , தடையை மீறி போராட்டம் நடத்துவது ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட மரபு தான் என்ற போதிலும், ராமதாஸ் அய்யாவை பழிவாங்கும் நோக்குடன் அவரை தமிழக அரசு கைது செய்தது. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அறவழிப் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட முதல் தலைவர் ராமதாஸ் அய்யா  தான் என்பதிலிருந்தே அ.தி.மு.க. அரசின் பழி வாங்கும் போக்கை உணர்ந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்ட ராமதாஸ் அய்யாவை  அருகில் உள்ள கடலூர் மத்திய சிறையிலோ அல்லது சென்னை புழல் சிறையிலோ தான் காவலில் வைத்திருக்க வேண்டும். ஆனால், அ.தி.மு.க. அரசோ வேண்டுமென்றே திருச்சி மத்திய சிறையில் பயன்பாடற்ற, பாழடைந்த, பாலைவனம் போன்று வெப்பம் சுட்டெரிக்கக் கூடிய ஒரு கட்டிடத்தில் அடைத்து தமிழக அரசு கொடுமைப் படுத்தியது. சிறையில் அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல் அய்யா அவர்களை இன்னலுக்குள்ளாக்கியது.
 
ராமதாஸை சிறையில் அடைத்த பிறகும் அரசின் பழிவாங்கல் தொடர்ந்தது. விழுப்புரம் வழக்கில் அய்யாவுக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில், அவர் விடுதலை ஆவதை தடுக்கும் வகையில் மாமல்லபுரம் மாநாடு தொடர்பான இரு வழக்குகளை தோண்டி எடுத்து காவல்துறையினர் கைது செய்தனர். அவ்வழக்குகளைத் தொடர்ந்து 2004&ஆம் ஆண்டில் மதுரையில் நடந்த நிகழ்வு தொடர்பான வழக்கில் ராமதாஸ் அய்யா  கைது செய்யப்படுவதாக அறிவித்த காவல்துறை, நள்ளிரவில் நீதிபதியை சிறைக்கு அழைத்து வந்து  நீதிமன்றக் காவலில் வைப்பதற்கான உத்தரவைப் பெற்றது. அந்த வழக்கிலும் பிணை கிடைத்து விடும் என்பதை அறிந்த தமிழக அரசு, அடுத்த கட்டமாக கூடங்குளம் வழக்கில் கைது செய்தது. அதுவும் கூடங்குளம் அணுஉலை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெறும்படி மே மாதம் 6-ஆம் தேதி உத்தரவிட்டிருந்த நிலையில், அதை மதிக்காமல் அதற்கு அடுத்த நாளே ராமதாஸை தமிழக அரசு கைது செய்தது பழி வாங்கல் மற்றும் மனித உரிமை மீறலின் உச்ச கட்டம் ஆகும். இவ்வாறாக மொத்தம் 5 வழக்குகளில் அடுத்தடுத்து கைது செய்ததன் மூலம் ராமதாஸை மனதளவிலும், உடல் அளவிலும் தமிழக அரசு இன்னலுக்குள்ளாக்கியது.
 
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான ராமதாஸ் அய்யா  ஏற்கனவே இதய நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இத்தகைய சூழலில் 110 டிகிரி வெப்பநிலை நிலவிய திருச்சி மத்திய சிறையில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு பிரிவில் அவரை தமிழக அரசு அடைத்துக் கொடுமைப் படுத்தியது. இதனால் ராமதாஸ் அய்யாவின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ராமதாஸ் அய்யா  சிறையிலிருந்து உயிருடன் வெளிவருவாரா? என்ற ஐயம் ஏற்பட்டது. சிறையிலிருந்து வெளிவந்த உடனேயே ராமதாஸ்க்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு  இதய பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நிலை உருவானது. இதற்கெல்லாம் அ.தி.மு.க. அரசின் திட்டமிட்ட சிறைக்கொடுமைகள் தான் காரணமாகும். நீதிக்காக போராடிய ராமதாஸை கைது செய்து, கொடுமைப்படுத்தியதற்காக மக்கள் விரோத தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
 
தீர்மானம் - 2: வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குருவுக்கு மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுவதற்கு கண்டனம்
 
பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக்குழுத் தலைவரும், வன்னியர் சங்கத் தலைவருமான ஜெ.குருவை கடந்த 30.04.2013 அன்று பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்த தமிழக அரசு , அதன் பின்னர் அவர் மீதான பழைய வழக்குகளையெல்லாம் தூசு தட்டி எடுத்து , அவ்வழக்குகளிலும் அவரை கைது செய்தது. 1997&ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கில் இப்போது குருவை தமிழக அரசு கைது செய்திருப்பது அப்பட்டமான பழி வாங்கள் நடவடிக்கையாகும். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் உச்ச கட்டமாக அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்திருக்கிறது.
 
கடந்த 53 நாட்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குருவை அவர் மீதான வழக்குகளில் காவல் நீட்டிப்புக்காக கொண்டு செல்வதாகக் கூறி, அலைக்கழித்து வருகிறது. இந்த வழக்குகளில் வீடியோ கான்பரன்சிங் முறையில் காவல் நீட்டிப்பு செய்ய முடியும் என்ற போதிலும், ஆட்சியாளர்களின் பழி வாங்கும் வெறி காரணமாகவே அவர் இப்படியெல்லாம் அலைக்கழிக்கப் படுகிறார்.  ஏற்கனவே கழுத்து வலி, முதுகுத் தண்டு வலி  ஆகியவற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் நிலை, காவல்துறையினரின் அலைக்கழிப்புகள் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், சட்டத்தை காலில் போட்டு மிதிப்பதையே வழக்கமாக கொண்ட ஜெயலலிதா அரசு, சிறிதளவு கூட மனித நேயம் இல்லாமல், குருவுக்கு சிகிச்சை வழங்க மறுத்து வருகிறது. இதனால், குருவின் கை, கால்கள் செயலிழந்து விடும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த அரக்கத் தனமான போக்கை இந்த செயற்குழு கடுமையாக கண்டிக்கிறது. இதனால் குருவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்காக தமிழக அரசு பதில் கூறியே ஆக வேண்டும் என்றும் பா.ம.க. செயற்குழு எச்சரிக்கிறது.
 
 
 
தீர்மானம் - 3: தடுப்புக்காவல் சட்ட கைது நடவடிக்கை: தமிழக அரசின் அடக்குமுறைக்கு கண்டனம்
 
தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக கடுமையான அடக்குமுறையை ஆளும் அ.தி.மு.க. அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. நீதி கேட்டு போராட்டம் நடத்தியதற்காக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அய்யா அவர்களை கைது செய்த தமிழக அரசு அவரை மேலும் பல வழக்குகளில் கைது செய்து பழி வாங்கியது.  பா.ம.க. இளைஞர் அணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராமதாஸ் அன்புமணி இராமதாசு, பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்டோருக்கு எதிராகவும் அடுத்தடுத்து பொய் வழக்குகளை தொடர்ந்து கைது செய்தது. இந்த அடக்குமுறையை கண்டித்து அறவழியில் போராட்டம் நடத்திய 7500&க்கும் மேற்பட்ட பா.ம.க. முன்னணியினரை தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.
 
அதுமட்டுமின்றி, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவரும், வன்னியர் சங்கத் தலைவருமான ஜெ.குரு மற்றும்  பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தைச் 122 பேர் குண்டர் சட்டத்தின்படியும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்படியும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சுதந்திர இந்தியாவில் ஒரே கட்சியை, ஒரே சமுதாயத்தை சேர்ந்த இவ்வளவு பேர் ஒரே மாதத்தில் கைது செய்யப்பட்டதில்லை. இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டபோது, மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களைவிட, அதிக எண்ணிக்கையிலானவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
குண்டர் சட்டத்தையும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தையும் பயன்படுத்துவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை சாதாரணச் சட்டங்களைப் பயன்படுத்தி, கட்டுப்படுத்த முடியாத நிலையில்தான் இந்தச் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒருவரின் நடவடிக்கையால், தேசப் பாதுகாப்பிற்கோ அல்லது மக்களின் பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே தடுப்புக் காவல் சட்டங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியிருக்கிறது. ஆனால், தமிழக அரசோ சட்டவிதிமுறைகளையும், உச்சநீதிமன்றத்தில் வழிகாட்டுதல்களையும் காலில்போட்டு மிதித்துவிட்டு, பாட்டாளி மக்கள் கட்சியினரை தடுப்புக் காவல் சட்டங்களில் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது. அ.தி.மு.க. அரசின் இந்த அடக்குமுறைக்கு, பா.ம.க. தலைமைச் செயற்குழு கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
 
அதே நேரத்தில், இத்தகைய அடக்குமுறைகளைக் கண்டு, பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் அஞ்சாது. தடுப்புக் காவல் சட்டங்களின்படியும், பிற சட்டங்களின்படியும் கைது செய்யப்பட்டுள்ள பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி, பொருளுதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் பா.ம.க. வழங்கும்; இந்த வழக்குகள் அனைத்தையும் சட்டப்படி எதிர்கொண்டு, தமிழக அரசின் அடக்குமுறையை முறியடிக்க இக்கூட்டம் சூளுரை மேற்கொள்கிறது.
 
 
 
தீர்மானம் - 4: மரக்காணம் கலவரம் குறித்து நீதிவிசாரணை நடத்தாததற்கு கண்டனம்
 
மரக்காணம் கலவரத்தையும், அதன்பின் வடதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வன்முறைகளையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தான் திட்டமிட்டு நடத்தினார்கள் என்பதற்கு அசைக்கமுடியாத ஆதாரங்கள் உள்ளன. மரக்காணத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த இருவரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் படுகொலை செய்ததற்கான ஆதாரங்களை காவல்துறையிடம் ஒப்படைத்த பிறகும், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வடமாவட்டங்களில் பேருந்துகள் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய விடுதலைச் சிறுத்தைகளை பா.ம.க.வினரும், பொதுமக்களும்  காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்தப் பிறகும், அவர்களைக் கைது செய்யாத காவல்துறையினர், அப்பாவி பா.ம.க.வினர் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதற்கெல்லாம் மேலாக, இந்த வன்முறைகளை பா.ம.க.வினர் தான் நடத்தியதாக இந்த வழக்குகளை விசாரிக்கும் காவல்துறைக்குப் பொறுப்பான உள்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் குற்றம்சாட்டியிருக்கிறார். நடுநிலையான விசாரணைக்கு வகை செய்யவேண்டிய முதலமைச்சரே இவ்வாறு கூறியுள்ள நிலையில், இந்த வழக்குகளின் விசாரணை நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கை அடியோடு பொய்த்துவிட்டது. எனவே, மரக்காணம் கலவரம் குறித்தும், அதைத் தொடர்ந்து வடமாவட்டங்களில் நடைபெற்ற வன்முறைகள் குறித்தும் பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதிவிசாரணை நடத்த ஆணையிட வேண்டும் அல்லது இதுதொடர்பான வழக்குகளை நடுவண் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. ஆனால், உணமைகள் வெளிவந்து விடுமோ என்ற அச்சத்தில் நீதி விசாரணைக்கு  தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டு வருவதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
 
 
 
தீர்மானம் - 5: மரக்காணம் கலவரத்தில் உயிரிழந்தோருக்கு வீரவணக்கம்
 
மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் பங்கேற்க வந்தவர்கள் மீது, மரக்காணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் கொல்லப்பட்ட அரியலூர் மாவட்டம் மென்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தேவனாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த விவேக் ஆகியோருக்கும், ராமதாஸ் அய்யா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தீக்குளித்து உயிர்நீத்த திருவண்ணாமலை மாவட்டம் கீழ்செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த  ஜெகன் என்கிற பாண்டியனுக்கும் இச்செயற்குழு வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.
 
மாமல்லபுரம் மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர்  ஊர் திரும்பும் வழியில் சாலை விபத்தில் சிக்கி உயிர்நீத்த வேலூர் மாவட்டம் நெமிலியை அடுத்த புதேரி கிராமத்தைச் சேர்ந்த பா.ம.க. தொண்டர் கிருபாகரன், வாணியம்பாடியை அடுத்த தேவலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்  ஆகியோருக்கும் இச் செயற்குழு கூட்டம் இரங்கல் தெரிவிக்கிறது.
 
 
 
தீர்மானம் -6: காவிரிப் பிரச்சனைக்குத் தீர்வுகாண அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாத தமிழக அரசுக்கு கண்டனம்
 
தீரா நதியாக ஓடி, சோழ நாட்டை வளம் கொழிக்க வைத்த காவிரி ஆறு, தற்போது ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் வறண்டுபோய் பாலைவனமாகக் காட்சியளிக்கிறது. காவிரி பிரச்சனையில் கர்நாடக அரசு கடைப்பிடித்து வரும் சுயநலப்போக்கும், காவிரியில் தமிழகத்திற்கு உரிய உரிமைகளை திராவிடக் கட்சிகள் தாரைவார்த்ததும்தான் இன்றைய அவலநிலைக்குக் காரணமாகும். காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவருவதால், தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் குறுவை சாகுபடி முழுவதுமாக பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போது கனமழை பெய்துவரும் போதிலும், அதன் மூலம் கிடைக்கும் தண்ணீரைப் பகிர்ந்துகொள்ள கர்நாடகம் முன்வரவில்லை. காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்காக இடைக்கால ஏற்பாடாக அமைக்கப்பட்டிருக்கும் காவிரி மேற்பார்வைக்குழு பயனற்றதாக உள்ளது. கர்நாடகத்தை வழிக்-குக் கொண்டு வந்து, காவிரியில் தண்ணீர் திறந்துவிடச் செய்வதற்கான அதிகாரம் இக்குழுவுக்கு இல்லை. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி, இந்த அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மட்டுமே உண்டு. எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தையும், அதற்கு உதவுவதற்காக காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவையும் அமைப்பதற்கான அரசியல் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல்,  எல்லாப் பிரச்சனைகளையும் உச்சநீதிமன்றத்தின் மூலமாகவே தீர்க்கமுடியும் என்ற தமிழக அரசின் அணுகுமுறை எப்போதும் பயனளிக்காது.  தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு நெருக்கடி தருவதன் மூலமாக மட்டுமே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும். இதுபற்றி விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்திய போதிலும் , அதைப் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக செயல்பட்டு, தமிழகத்தின் உரிமைகளை காவு கொடுக்கும் தமிழக அரசை இச்செயற்குழு கண்டிக்கிறது.
 
 
 
 
தீர்மானம் -7: வறட்சி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அரசுக்கு கண்டனம்
 
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி இப்போது நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் குடிநீர்த் தட்டுப்பாடு இல்லாத மாவட்டமே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து மாவட்டங்களிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிநீர் வழங்கக்கோரி, காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவது, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கவும், வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கை எடுக்க்காத தமிழக அரசுக்கு  பா.ம.க. தலைமை செயற்குழு கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
 
 
 
தீர்மான
ம் - 8 : விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி
 
காவிரிப் பாசன மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முழுமையான பயிர் பாதிப்படைந்த உழவர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. மற்ற விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. வறட்சியால் அனைத்து விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால்,  அனைவருக்கும் ஏக்கருக்கு ரூ.25,000 வீதம் ஒரே மாதிரியான இழப்பீட்டை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு இதுவரை ஏற்கவில்லை.
 
அதுமட்டுமின்றி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல, வறட்சியால் விவசாயிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  பெற்றுள்ள பயிர்க் கடன்களை உடனடியாக திரும்பச் செலுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து கூட்டுறவு சங்கங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளன. இதனால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். கையில் இருந்த காசையும், கடனாக பெற்ற தொகையையும் சம்பா சாகுபடியில் முதலீடு செய்து, வறட்சி காரணமாக அனைத்தையும் இழந்து விட்டு, அடுத்த சாகுபடிக்கு செலவழிக்க வழியில்லாமல் தவிக்கும் விவசாயிகளின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யாமல், அவர்களை  மிரட்டி கடனை வசூலிக்க  கூட்டுறவு சங்கங்கள் முயல்வது கண்டிக்கத் தக்கது.
 
 
தீர்மானம் - 9 : விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாததற்கு கண்டனம்
 
அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து விட்டன.  தரமான அரிசியின் விலை, வரலாறு காணாத வகையில் கிலோ ரூ.50 என்ற அளவுக்கு உயர்ந்து விட்டது. ஒரு லிட்டர் நல்லெண்ணெயின் விலை ரூ.300 ஆக அதிகரித்திருக்கிறது. காய்கறிகளின் விலைகளோ ஏழைகளால் எட்டிப்பிடிக்கவே முடியாத உயரத்திற்கு சென்று விட்டன. ஒரு கிலோ இஞ்சி ரூ.250, வெங்காயம் ரூ.130, பீன்ஸ் ரூ. 125 என உயர்ந்துள்ளன. தக்காளியும், பச்சை மிளகாயும் கூட கிலோ ரூ.60 என்ற அளவைத் தாண்டி விட்டன. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு கூட உண்ண முடியாத நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், தமிழக அரசோ இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் உறங்கிக் கொண்டிருக்கிறது.  யானைப்பசிக்கு சோளப் பொறியை போடுவதைப் போல தமிழகத்தில் ஏழரை கோடி மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெயரளவில் சில மலிவு விலை காய்கறி கடைகளை திறந்து மக்களை ஏமாற்ற முயல்வதையும், ஏழைகளின் நலனில் அக்கறையின்றி  இருப்பதையும் பா.ம.க. கண்டிக்கிறது.
 
 
 
தீர்மானம் -10 : இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்
 
வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் தாக்குவதும், சிறை பிடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக தொடரும்  சிங்களப் படையினரின் தாக்குதலில் 600&க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்காக சிங்களப் படையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தான்  தமிழக மீனவர்கள் மீது துணிச்சலாக தாக்குதல் நடத்துகின்றனர்; இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.
 
கடந்த ஜூன் 5 மற்றும் 6&ஆம் தேதிகளில் கச்சத்தீவு அருகில் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 49 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  அனைவரையும் மேலும் 15 நாட்கள் காவலில் வைக்கும்படி இலங்கை நீதிமன்றங்கள் ஆணையிட்டிருக்கின்றன. தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரால் தாக்கப்படும் சம்பவங்களும் தொடர்கின்றன. இதனால் மீனவர்
கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதற்கே அஞ்சுகின்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர்  வாழ்வாதாரத்தை இழந்து தவி
க்கின்றனர்.
 
இவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக முதலமைச்சரோ, இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதுவதுடன் தமது கடமை முடிந்து விட்டதாக கருதுகிறார். இந்த அணுகுமுறை பயனளிக்காது. எனவே, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படியும், இலங்கப் படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்படியும் மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் அழுத்தம் தர வேண்டும். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக கச்சத்தீவை மத்திய அரசு மீட்டுத்தர எடுக்கவேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
 
 
 
தீர்மானம் -11 : இலங்கையில் 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்வதற்கான முயற்சிகளை முறியடிக்க வேண்டும்
 
இலங்கையில் போர் முடிவடைந்த 3 மாதங்களில் ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படும் என்று இலங்கை அதிபர் மகிந்த இராஜபக்சே அறிவித்திருந்தார். ஆனால், போர் முடிவடைந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட போதிலும் அதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை. மாறாக தமிழர்கள் வாழும் பகுதிகளை சிங்கள மயமாக்குதல், தமிழர்களுக்கென உள்ள ஓரிரு அதிகாரங்களையும் பறித்தல் போன்ற செயல்களில் தான் இலங்கை அரசு ஈடுபட்டுவருகிறது. இதன் அடுத்தகட்டமாக ஈழத் தமிழர்களுக்கு பெயரளவிலாவது  அதிகாரம் வழங்கும் நோக்குடன், 1987&ஆம் ஆண்டு இந்திய & இலங்கை ஒப்பந்தத்தின்படி கொண்டுவரப்பட்ட 13&ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தையே இரத்து செய்ய அதிபர் இராஜபக்சே திட்டமிட்டிருக்கிறார். இதற்கான 19&ஆவது அரசியல் சட்டத்திருத்த மசோதாவை இராஜபக்சே அரசில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உருமயக் கட்சி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. 13&ஆவது அரசியல் சட்டத் திருத்த
ம் ரத்து செய்யப்பட்டால் இது இந்தியாவுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமரியாதையாக அமையும். எனவே, இந்த முயற்சியை தடுத்து நிறுத்துவதுடன், இலங்கை இனப்பிரச்சினைக்கு தமிழீழம் தான் நிரந்தரத் தீர்வு என்பதால் அதற்கான நடவடிக்கைகளை  மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பா.ம.க. தலைமை செயற்குழு வலியுறுத்துகிறது.
 
 
 
தீர்மானம் -12 : தமிழகத்தில் சந்தி சிரிக்கும்  சட்டம் ஒழுங்கு
 
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு என்ற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததால் தமிழகத்தில் இருந்த கொள்ளையர்கள் அனைவரும் ஆந்திராவுக்கு தப்பி ஓடிவிட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா பெருமிதம் தெரிவித்திருந்தார். ஆனால், வட இந்
திய கொள்ளையர்கள் அனைவரும் தமிழகத்திற்குள் வந்து விட்டார்களோ என்று அஞ்சும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மோசமடைந்துவிட்டது.
 
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொலைகளும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொள்ளை - திருட்டு சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இதைத் தடுத்து, சட்டம் ஒழுங்கை மேம்படுத்த வேண்டிய முதலமைச்சர் ஜெயலலிதா, அதைச் செய்யாமல், பா.ம.க.வினரை பொய் வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைப்பதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் தடையின்றி தொடர்வதால் பொது மக்கள் தெருக்களில் நடமாடுவதற்கே அஞ்சுகின்றனர்.   பாட்டாளி மக்கள் கட்சியினரை பழி தீர்ப்பதிலேயே தீவிரம் காட்டும் தமிழக அரசு, சீரழிந்து கிடக்கும் சட்டம்- ஒழுங்கு சரி செய்யாதததை பாட்டாளி மக்கள் கட்சி கண்டிக்கிறது.
 
 
 
தீர்மானம் -13 : தமிழகத்தில் முழு மதுவிலக்கு
 
தமிழகத்தில் எதிர்காலத் தலைமுறையை சீரழிக்கும் தீமையாக மது உருவெடுத்திருக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், சாலை விபத்துக்கள் உள்ளிட்ட அனைத்து தீமைகளுக்கும் முக்கிய காரணமாக விளங்குவது மது அரக்கன் தான். தமிழ்நாட்டில் மதுவை  ஒழிக்க வே
ண்டும் என்று வலியுறுத்தி கடந்த 24 ஆண்டுகளாக  பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறது. கடந்த ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சியால் இரண்டு முறை நடத்தப்பட்ட மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன், அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்றுள்ளது.
 
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் மக்களின் உணர்வாக உள்ளது. இவ்வளவுக்குப் பிறகும் இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மதுக்கடைகளை படிப்படியாக மூடி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த தமிழக அரசு முன்வராதது கண்டிக்கத் தக்கது.
 
 
 
தீர்மானம் - 14 : கல்விக்கட்டண கொள்ளை
 
தமிழ்நாட்டில் கல்வி வணிகமயமாக்கப்பட்டு, கல்விக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை நடப்பது தொடர்கதையாகிவிட்டது. மழலையர் வகுப்பில் சேருவதற்கே குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கல்விக் கட்டண கொள்ளையைத் தடுப்பதற்காக  அரசால் அமைக்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டண
த்தைவிட, பல மடங்கு அதிகமாக பள்ளிகள் வசூலித்து வருகின்றன. இந்தநிலையில், கல்விக் கட்டண நிர்ணயக்குழுவும், பள்ளி நிர்வாகங்களின் அழுத்தத்திற்குப் பணிந்து, அவர்களுக்குச் சாதமாக அதிக கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளின் கட்டணம் 20 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
 
இந்த நிலையை மாற்றி, அனைத்துப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் நியாயமான, ஏழை&எளிய மக்கள் செலுத்தக்கூடிய வகையில் கட்டண நிர்ணயம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததற்கு இந்த செயற்குழுக் கூட்டம் கண்டனம் தெரிவிக்கிறது.
 
 
 
தீர்மானம் - 15 : மாநிலங்களவைத் தேர்தல் - பா.ம.க. புறக்கணிப்பு
 
தமிழ்நாட்டில் கடந்த 2011&ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, எதிர்காலச் செயல் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக 27.07.2011 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இனி வரும் காலங்களில் திராவிடக் கட்சிகளுடனோ அல்லது தேசியக் கட்சிகளுடனோ கூட்டணி அமைப்பதில்லை என்றும், ஒத்த கருத்துள்ள கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளுடன் இணைந்து 
தனி அணியை ஏற்படுத்தி போட்டியிடுவது என்றும் முடிவெடுக்கப் பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த முடிவு அனைத்து தரப்பு மக்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கும்  பெருமளவில் அதிகரித்து வருகிறது.
 
இந்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடை
பெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்கும்படி போட்டியிடுகின்ற சில கட்சிகள் எங்களுக்கு கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில்  விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் பேசிய அனைவரும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தனித்துப் போட்டி என்ற முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நிர்வாகக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து இன்றைய செயற்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. நிர்வாகக்குழு கூட்டத்தில் காணப்பட்ட அதே உணர்வே இன்றைய செயற்குழு கூட்டத்திலும் வெளிப்பட்டது.
 
மாநிலங்களவைத் தேர்தலில் யாரையும் ஆதரிக்காமல், புறக்கணிக்க வேண்டும்  என்று செயற்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கருத்தை ஏற்று வரும் மாநிலங்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரிப்பதில்லை என்றும், மாநிலங்களவைத் தேர்தலை புறக்கணிப்பது என்றும் செயற்குழு கூட்டம் ஒரு மனதாக முடிவெடுக்கிறது.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்