கிரீமிலேயரை முழுமையாக நீக்க வேண்டும்: கருணாநிதி

சனி, 05/18/2013 - 20:30 -- Velayutham
 
இட ஒதுக்கீட்டில் இருந்து கிரீமிலேயர் பாகுபாட்டை முழுவதுமாக நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
 
தேசிய முன்னணி அரசின் பிரதமராக இருந்த வி.பி.சிங் காலத்திலிருந்து மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுகீட்டினை வழங்கி வருகிறது.திமுக தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக இது கிடைக்கப் பெற்றதாகும்.27 சதவீத இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர்களைத் (முன்னேறியவர்கள்) தவிர்க்க ஆண்டு ஒன்றுக்கு ரூ.4.50 லட்சத்துக்கு மிகாமல் வருவாய் உள்ளவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.இந்த உச்ச வரம்பை நகர்ப்புறங்களில் ரூ.12 லட்சமாகவும், கிராமப்புறங்களில் ரூ.9 லட்சமாகவும் உயர்த்த வேண்டும் என்று இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்  பரிந்துரை செய்தது.
 
ஆனால் இது சாத்தியம் இல்லை என்று கூறியதுடன், ஒரே மாதிரியாக ரூ.6 லட்சம் வரை உயர்த்தலாம் என்று மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்தது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.6 லட்சமாக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இடஒதுக்கீடு என்பது ஏழ்மையைப் போக்குவதற்கான கருவி இல்லை. நூற்றாண்டுகளாக உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, சமூக ரீதியாகவும், கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியல் சட்டம் வழங்கிய உரிமையே இடஒதுக்கீடு என்பதாகும்.ஒரு குடும்பத்தினுடைய ஆண்டு வருவாய் என்பது ஆண்டுக்காண்டு வேறுபடுவதாகும்.இதை வைத்து கிரீமிலேயரைக் கணக்கிட முடியாது.
 
மேலும் ஒரு தாயின் வயிற்றுப் பிள்ளைகள் இடையேயும் வேறுபாட்டையும், பகைமையையும் ஏற்படுத்தும்.எனவே, இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை முழுமையாக ஏற்காமல், வருமான வரம்பினை ரூ.6 லட்சம் வரை மட்டுமே உயர்த்த முடிவு செய்திருப்பது முழு நிறைவு அளிக்கவில்லை.எனினும், இதற்காக நீண்ட காலமாக வாதாடி வந்தவன் என்ற முறையில் ஓரளவு திருப்தியை அளித்துள்ளது.இந்த முடிவினை எடுத்துள்ள மத்திய அரசுக்கு திமுக சார்பில் நன்றியைத் தெரிவிக்கிறேன்.
 
அதேநேரம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரையை கடந்த முறை முழுவதுமாக ஏற்றுக்கொண்டதைப் போல, இந்த முறையும் மத்திய அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.கிராமப்புற மக்களுக்கு ரூ.9 லட்சமாகவும், நகர்ப்புற மக்களுக்கு ரூ.12 லட்சம் என்றும் மத்திய அரசு உயர்த்தி அறிவிக்க வேண்டும்.மேலும் இட ஒதுக்கீட்டில் இருந்து கிரீமிலேயர் என்ற பாகுபாட்டையே முழுவதுமாக நீக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்