தூய்மையான கிராம இயக்கம் , தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

புத, 11/21/2012 - 20:57 -- Reporter

சென்னை நவ.21 :- இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு,
தமிழ்நாட்டில் சுகாதார புரட்சியின் மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு, சுற்றுச்சூழல் சுகாதார மேம்பாட்டை உள்ளடக்கிய தூய்மையான கிராம இயக்கம் என்ற ஒரு திட்டம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களால், அவர்களது முந்தைய ஆட்சிக் காலத்தில் அதாவது 2003 ஆம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, திறந்த வெளியில் மலம் கழித்தலை தடுத்தல், மழைநீர் சேகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, மனிதக் கழிவுடன் இணைந்த எரிவாயுகலன் அமைத்தல், தனிநபர் இல்லங்கள் மற்றும் பள்ளிகளில் சுகாதார வசதி ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. மேலும் நூறு விழுக்காடு சுகாதாரத்தை எய்துகின்ற கிராம ஊராட்சிக்கு ரொக்கப்பரிசு அளிக்கின்ற திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
படம்: wsscc.org
மேலும் சென்ற ஆண்டு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் 170 கோடி ரூபாய் செலவில் 12,793 மகளிர் சுகாதார வளாகங்களை சீரமைக்க உத்தரவிட்டார்கள். ஊரகப் பகுதிகளில் 100 விழுக்காடு சுகாதாரத்துடன் தமிழ்நாடு, “திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற மாநிலம்” என்ற இலக்கினை அடையும் பொருட்டு, ஆண்களின் நெடுநாளைய தேவையான ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகத்தினை அமைக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

இதன் அடிப்படையில், 2012-13 ஆம் நிதியாண்டில், முதற்கட்டமாக கிராம ஊராட்சிகளில் 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 570 சதுர அடி பரப்பளவில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு இரண்டு ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகங்கள் வீதம் 770 கிராம ஊராட்சிகளில் 35 கோடி ரூபாய் செலவில் அமைக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். ஒவ்வொரு வளாகமும் 6 இந்திய முறை கழிவறை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக கைப்பிடி பொருத்தப்பட்ட 1 ஐரோப்பிய முறை கழிவறை (Western Closet) இளஞ்சிறார்கள் பயன்படுத்தக் கூடிய கழிவறை (Baby Friendly Toilet) குளிப்பதற்கான இடம், தண்ணீர் வசதியுடன் கூடிய தொட்டி மற்றும் கை கழுவும் கோப்பை (கலன்), துணி துவைக்கும் கல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும். ஒவ்வொரு வளாகத்திற்கும் பயன்படுத்துவோர் பராமரிப்புக் குழு அமைக்கப்பபடும். அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் அரசின் குறிக்கோளான தூய்மையான கிராம இயக்கம் என்ற திட்டம் வெற்றிகரமாக செயலாக்கம் பெறும்.

Undefined
Topic: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்