மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்திப் பொருட்களின் மகளிர் மேளா – 2012

சனி, 10/13/2012 - 00:59 -- Reporter
சென்னை அக் 12:-
“நவராத்திரி – தீபாவளி ” விற்பனைக் கண்காட்சியினை
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர்
 திருமதி பெ.அமுதா.இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை மிகச்சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும், கிராம அங்காடிகள், கல்லூரி சந்தைகள் மற்றும் கண்காட்சிகள் மூலமாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி பொருட்களின் விற்பனை வாய்ப்பினை மேம்படுத்திடவும்  இவ்வரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
 தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திடும் நோக்கிலும், விற்பனை வாய்ப்பினை மேம்படுத்திடவும் சென்னையில் பல்வேறு சிறப்பு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று                     ( 12.10.2012 ) சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில்  மகளிர் மேளா - 2012 “நவராத்திரி – தீபாவளி” விற்பனைக் கண்காட்சியினை தமிழ்நாடு மகளிர்  நல  மேம்பாட்டு   நிறுவன   மேலாண்மை இயக்குநர் திருமதி பெ. அமுதா, இ.ஆ.ப., அவர்களும், இந்தியன் வங்கியின் பொதுமேலாளர் திரு  எம். கதிரேசன் அவர்களும் குத்துவிளக்கேற்றி கண்காட்சியினை தொடங்கி வைத்தார்கள். 
இக்கண்காட்சி 12.10.2012 முதல் 04.11.2012 வரை, காலை 10.30 மணிக்கு தொடங்கி மாலை 8.30 மணி வரை நடைபெறும். அனைத்து பண்டிகை விடுமுறை நாட்கள் மற்றும் சனிக்கிழமை, ஞாயிறுக்கிழமைகளிலும் விற்பனை நடைபெறும். 
2012 அக்டோபர் 12 முதல் நவம்பர் 04 வரை நடைபெறும் இந்தக்  கண்காட்சியில், நவராத்திரி கொலு பொம்மைகள், தரமான வீட்டு உபயோகப் பொருட்கள், வண்ண வண்ண பருத்தி மற்றும் பட்டு ஆடைகள், மங்கையர் மனம் மயக்கும் செயற்கை ஆபரணங்கள், காகிதம், சணல், களிமண் ஆகியவற்றினால் செய்யப்பட்ட பொம்மைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகள், புளி, தேன், ராகி, சாமை, ரோஸ் குல்கந்து மற்றும் மூலிகைப் பொருட்கள், சுவை மிகுந்த உணவுகள்,  ருசியான பேக்கரி தின்பண்டங்கள், தேங்காய் நாரினால் தயாரிக்கப்பட்ட மிதியடிகள் விற்பனைச் செய்யப்படுகின்றன. 
இந்தக் கண்காட்சியில்   பல்வேறு மாவட்டங்களிலிருந்து பிரசித்தி பெற்ற பாரம்பரிய உணவு வகைகள் தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும். தீபாவளி பண்டிகைக்கு தேவையான இனிப்பு மற்றும் கார வகை தின்பண்டங்கள் வியாபார ஆணையின் பேரில் தரமாக தயாரித்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியில் பொருட்கள் விற்பனை செய்திட 32 மாவட்டங்களில் இருந்தும் சுய உதவிக் குழுக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 12.10.2012 முதல் 19.10.2012 வரை நடைபெறும் கண்காட்சியில் சென்னை, தேனி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், தஞ்சாவூர், அரியலூர், நாமக்கல், தர்மபுரி, காஞ்சிபுரம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மகளிர் சுய உதவிக் குழுக்கள் விற்பனை அரங்குகளை அமைத்துள்ளனர். 
இரண்டாம் கட்டமாக 20.10.2012 முதல் 26.10.2012 வரை நடைபெறும் விற்பனைக் கண்காட்சியில் புதுக்கோட்டை, திருவாரூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, கரூர், ஈரோடு, நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருச்சி, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களின் மகளிர் சுய உதவிக் குழுக்களும்,
மூன்றாம் கட்டமாக 27.10.2012 முதல் 04.11.2012 வரை நடைபெறும் விற்பனைக் கண்காட்சியில் பெரம்பலூர், சென்னை, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், கடலூர், திருப்பூர், நீலகிரி, சிவகங்கை, திருவள்ளூர், வேலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மகளிர் சுய உதவிக் குழுக்களும் விற்பனை அரங்குகளை அமைக்கவுள்ளனர்.
மேலும், மூன்று கட்ட விற்பனைக் கண்காட்சியிலும், நாமக்கல், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், கடலூர், கோயம்புத்தூர், திருவாரூர், திருவள்ளூர், தேனி, சேலம், நாமநாதபுரம், விழுப்பும், வேலூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் செயல்படும் சுய உதவிக் குழுக்களும் மற்றும் திருநங்கையர்கள், மாற்றுத்திறனாளிகள், முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் ஆகியோரும்  இக்கண்காட்சியில்  விற்பனை அரங்குகளை அமைத்துள்ளனர்.
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர்கள் முனைவர் ம.மனோகர சிங் அவர்கள், திருமதி ஆர்.ராஜஸ்ரீ அவர்கள், புதுவாழ்வுத்திட்ட கூடுதல் இயக்குநர் திருமதி ஆர்.வி, சஜீவனா அவர்கள், பொதுமேலாளர் திருமதி ஜி.லதா அவர்கள் மற்றும் மற்றும் இந்தியன் வங்கி, வள்ளுவர் கோட்டம் கிளை முதன்மை மேலாளர் திரு எம். ராமுடு ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், நடைபெறவுள்ள  மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்திப் பொருட்களின் மகளிர் மேளா - 2012 “ நவராத்திரி – தீபாவளி ” விற்பனைக் கண்காட்சியில்  மகளிர் சுய உதவிக் குழுக்கள் பிரத்யேகமாக தயாரித்துள்ள தரமான கொலு பொம்மைகள் , கலைப்பொருட்கள்,  வீட்டு உபயோகப் பொருட்கள், நேர்த்தியான பட்டு, பருத்தி மற்றும் கைத்தறி ஆடைகள், மங்கையருக்கான ஆபரணங்கள் ஆகியவை மிக நியாயமான விலையில்  பொதுமக்கள் வாங்கி பயன் பெறும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளன.  பொதுமக்கள் அனைவரும் “ நவராத்திரி – தீபாவளி ” கண்காட்சிக்கு வருகை புரிந்து  மகளிர் விற்பனை செய்யும் பொருட்களை வாங்கி  அவர்களது பொருளாதார நிலை உயர்வதற்கு ஒரு  உந்துகோலாக இருக்க வேண்டும் என  தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் திருமதி பெ.அமுதா.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்