நெல்லுக்கு கூடுதல் ஆதார விலை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள், 09/28/2012 - 15:37 -- Reporter

சென்னை

தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

நெல், கரும்பு போன்ற பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அறிவிக்கும் போதெல்லாம், விவசாயிகளை ஊக்குவிக்கும் வண்ணம், கூடுதல் ஆதார
விலையை எனது தலைமையிலான அரசு வழங்கி வருகிறது.
அந்த வகையில், 1.10.2012 முதல் 30.9.2013 வரையிலான காரீப் பருவத்திற்கு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான குறைந்தபட்ச ஆதார விலையை  மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி, சாதாரண நெல்லுக்கான விலை குவிண்டால் ஒன்றுக்கு 1,250 ரூபாய் என்றும், சன்னரக நெல்லுக்கான விலை குவிண்டால் ஒன்றுக்கு 1,280 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நெல் பயிரிடும் விவசாயிகளின் நலன்களைக் காக்கும் வகையில், சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள
1,250 ரூபாயுடன் கூடுதலாக தமிழக அரசின் சார்பில் 50 ரூபாய் வழங்கவும், சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 1,280 ரூபாயுடன் கூடுதலாக 70 ரூபாய் வழங்கவும், ஆக மொத்தம் சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு 1,300 ரூபாய் வழங்கவும், சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு 1,350 ரூபாய் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது மட்டுமல்லாமல், காவேரிப் பாசனப் பகுதிகளில், அதிக அளவில் நெல் விளையும் பகுதிகளில், தேவைக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு அனுமதி வழங்குமாறு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதையும், காவேரிப் பாசனப் பகுதி அல்லாத இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் திறக்க அனுமதி வழங்குமாறு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை  விவசாயிகளுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும்.
       

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்